இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

587

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் புதிய திருப்பமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவரும், மருத்துவருமான இளஞ்சேரனின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் திகதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதன்பின் பொலிசார் நடத்திய விசாரணையில், திவ்யா அடித்து கொல்லப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவரது கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

திவ்யா வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் பொலிசுக்கு சந்தேகம் தீராததால் மூவரையும் நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் காவலில் எடுத்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த கொலையில் மாமியார் ராணியின் அண்ணான சிவக்குமார் என்பவரும் மற்றும் கரூர் செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

திவ்யாவை கொலை செய்துவிட்டு இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சனையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்கள் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படும் சிவக்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.