சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது தமிழரசு கட்சி – சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு..!

594

sureshவடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவு, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல, தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நேற்று மாலை கூட்டம் நடைபெற்றதாகவும் அதன் பின்னரே அமைச்சர்கள் தெரிவு முடிவாகியுள்ளது என செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

ஆனால் நேற்றைய இந்த கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு வரவில்லை. அதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ போன்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை தனியே தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவெடுத்துள்ளார்கள்.

இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை நாம் கேட்பது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி.

ஏனெனில் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினை சிங்கள – முஸ்லிம் மக்களை சட்ட விரோதமாக குடியேற்றுதல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே அங்கு ஒரு அமைச்சு தேவைப்படுகின்றது.

வவுனியா மன்னாருக்கு ஒரு அமைச்சு இருக்கின்றது யாழ்ப்பாணத்திற்கு முதலமைச்சர் இருக்கின்றார் எனவே முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு தரவேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கை அந்த மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதனால் நாம் முல்லைத்தீவுக்கு ஒரு அமைச்சு பதவி கேட்கின்றோம்.

இவர்கள் இப்ப சொல்கின்றனர் ஈ.பி.ர்.எல்.ப் க்கு ஒரு அமைச்சு கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு பற்றி கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவே அவ்வாறு ஒரு அமைச்சு பதவி கொடுத்தால் அது ஒரு தனி நபருக்கு கொடுத்த அமைச்சு பதவியாகவே இருக்கும்.

அவ்வாறு எமது கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி கொடுப்பதாக இருந்தால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கவே நாம் கோருகின்றோம்.

அதேவேளை தேர்தல் பிரச்சார காலங்களில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்துள்ளது. இங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், என பேசிவிட்டு அவர் முன்னிலையில் முதலமைச்சர் சத்திய பிரமாணம் எடுத்ததில் எமக்கு உடன்பாடில்லை.

எனவே தமிழரசு கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது.

இந்த முடிவுகள் எதிர் காலத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்களை குழப்பும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.