தமிழ் பேச வராததால் தீபிகாவுக்கு டப்பிங் கலைஞர் குரல் கொடுத்தார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார் தீபிகா படுகோன்.
இப்படத்தில் அவரை தமிழ் பேசி நடிக்க வைக்க பட குழுவிலிருந்த உதவி இயக்குனர்கள் படாதபாடு பட்டனர். அவருக்கு தமிழ் கற்றுத்தர முயன்று சோர்வடைந்த பலர் அந்த முயற்சியை கைவிட்டனர்.
சவிதா ரெட்டி என்ற டப்பிங் கலைஞரை அழைத்து தீபிகாவுக்கு டப்பிங் பேச வைத்தனர். இது அவருக்கு பொருத்தமாக அமைந்தது. இதேநிலை ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்துக்கும் ஏற்பட்டது.
இதில் அபூர்வ சக்திகள் நிறைந்த பெண்ணாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்காக பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அவர் தமிழ் வசனம் பேச வேண்டி இருந்தது. இதற்காக இயக்குனர் சவுந்தர்யா கடுமையான முயற்சி மேற்கொண்டார்.
கடைசியில் அவரும் சோர்வடைந்தார். தீபிகாவிடம் தமிழ் பேச சொல்லி மல்லுகட்டுவதைவிட டப்பிங் கலைஞரை வைத்து பேச வைப்பதே பிரச்னை இல்லாத வேலை என்று சவுந்தர்யா முடிவு செய்தார்.
கோச்சடையானிலும் சவிதா ரெட்டியே தீபிகாவுக்கு குரல் கொடுத்தார். தீபிகாவின் கதாபாத்திரம் எப்படியெல்லாம் வசனம் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தேனோ அது டப்பிங் கலைஞரின் குரலில் நிறைவேறியது என்றார் சவுந்தர்யா.