கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவில்லை: சூர்யா..!

562

suryaகௌதம் மேனன் இயக்குவதாக அறிவித்த துருவநட்சத்திரம் படத்திலிருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார் சூர்யா.

கௌதம் மேனன் இயக்கப்போகும் துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக கொலிவுட்டில் தண்டோராக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதனை உறுதி செய்யும் வகையில் சூர்யாவும் ஒத்துக்கொண்டு அறிவிப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை என்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் சூர்யா.

இதுகுறித்து நேற்று மாலை அவர் விடுத்த அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதம் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது.

இது அனைவரும் அறிந்த செய்தி, பல்வேறு காரணங்களால் நாங்கள் இருவரும் இப்போது இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில் நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்புக்குச் செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாகக் கருதுகிறேன்.

இயக்குனர் கௌதம் என்னுடைய இந்த கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம்.

இதையே ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம், ஆனால் ஒப்பந்தம் செய்து ஒரு வருட காலம் கழிந்த பிறகும் கௌதம் அவர்கள் இன்னும் முழு கதையை என்னிடம் திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

சிங்கம் -2 படம் முடிந்த பிறகு ஆறு மாதங்களாக முழு கதையையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டு விடலாம் என்றார், நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன்.

மீண்டும் ஒரு டெஸ்ட் ஷுட் செய்து கெட்டப் மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும் கௌதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன்.

பல மாதங்களாக படப்பிடிப்பு போகாமல் வீட்டில் காத்திருக்கிறேன். கௌதம் அவர்களிடமிருந்து நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக் கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே கௌதம் அவர்களின் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திற்கு பூஜை போட்டு ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை.

இப்போது இந்த படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது. ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பிறகு இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

நானும், கௌதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது.

இந்த நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன். ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது.

நடிகனாக நம்பிக்கை இல்லாமல் செய்த படங்கள் எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன. நட்பின் அடிப்படையில் கௌதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன்.

இனி நாங்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கௌதம் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.