இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதியான லடாக்கில், மனிதர்கள் இல்லாத பகுதியில் சீனா பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக இந்திய இராணுவ வட்டாரங்கள் கூறுகையில், டோக்லாம் எல்லை பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனா இராணுவ தரப்புகள் எடுத்த எல்லா இராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால் டோக்லாம் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றம் குறையவில்லை.
இந்த நிலையில் லடாக் பகுதியில் மனிதர்கள் இல்லாத நிலப்பகுதியில் சீனா பாலம் அமைக்க, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் அது உண்மையில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் டோக்லாம், லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லா எல்லையோர பகுதிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவம் எப்போதும் விழிப்போடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவுக்கு லடாக் மட்டும் நோக்கமில்லை. சிக்கிம் எல்லைப் பகுதியும் சீனாவின் இலக்குதான்.
எனவே உச்சபட்ச எச்சரிக்கை நமது இராணுவ வீரர்களுக்கு, உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.
இந்த நிலையில், நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் எல்லைப் பிரச்சினையை தீர்க்க முடிவெடுக்க வேண்டும், இரு நாடும் யார் முதலில் படைகளை வாபஸ் பெறுவது என்று போட்டிபோட்டால் போர்ப் பதற்றம் நீடிக்கத்தான் செய்யும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.






