இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க கோரி முற்றுகை போராட்டம்..!

539

commonபொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலதலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொதுநலவாய மாநாடு வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுநலவாயத்தின் அடிப்படைகளுக்கே எதிரானதாகும். சுதந்திரம், ஜனநாயகம் இவற்றை அடிப்படையாக கொண்டுதான் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படைகளுக்கு விரோதமாக செயல்பட்ட பல்வேறுநாடுகள் இந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப்பிறகும் தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளையும் இதைபகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசு இனப்படுகொலை குற்றங்களுக்காக சர்வேதேச சமுகத்தால் தண்டிக்கப்படவேண்டிய நிலையில், இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவது இலங்கைக்கு உதவி செய்வதாகவும், காப்பாற்றுவதாகவும் மட்டுமின்றி இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும். இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றால் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய அமைப்பிற்கு ராஜபக்ஷ தான் தலைவராக இருப்பார் என்பதை சிந்தித்தால் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்பதின் நியாயம் புரியும்.

பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா அந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது. கனடாவை விட தமிழர்களின் இப்பாரிய பிரச்சனையில் அதிககடைமையுள்ள இந்தியா மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இப்பிரச்சாரத்தை பிற நாடுகளிடமும் முன்னெடுத்து செல்லவேண்டும். மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடுநடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும்போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் தேச பொதுவுடைமைகட்சியின் தோழர் தியாகு அவர்கள் தனது உடல் நிலையையும் உயிரின் மதிப்பையும் கருத்தில் கொண்டு வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தக்கூடாது இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடைபெற்றால் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை 12.10.2013 எஸ்.டி.பி.ஐகட்சியின் சார்பாக சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு தமிழின சொந்தங்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.