தமிழக மீனவர்கள் மீது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாகை மாவட்டம் வெள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 4 மீனவர்கள் கடந்த 10ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரையின் தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், அவர்கள் மீது சரமாரியாக தாக்கியதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலால் படுகாயம் அடைந்த நாகை மீனவர் கிருஷ்ணமூர்த்தி நாகை அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





