வெற்றி சச்சினுக்கு சமரப்பணம்: யுவராஜ் உருக்கம்..!

305

sachinஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்த சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங், ‘இந்த வெற்றியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அறிவித்தார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதிய டி20 போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (குஜராத் மாநிலம்) நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இப்போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸி. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 201 ஓட்டங்களைக் குவித்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியா 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை எடுத்து அபாரமாக வென்றது. ஒருகட்டத்தில் இந்தியா 11.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.

இந்த நெருக்கடியான கட்டத்தில் யுவராஜ் சிங், தலைவர் டோனி ஜோடி அபாரமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.

ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த யுவராஜ் 77 ஓட்டங்களையும் (35 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), டோனி 24 ஓட்டங்களையும் (21 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற யுவராஜ் கூறியதாவது,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா அல்லது சோகமாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்ததில் மகிழ்ச்சி.

அதே சமயம், இதே நாளில் சச்சின் தனது ஓய்வு முடிவை அறிவித்திருப்பதால் சோகமாகவும் உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஏ தொடரில் இருந்தே நல்ல பார்மில் இருக்கிறேன். இந்த வெற்றியை சச்சினுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும் திட்டமிட்டுள்ளேன். நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து நன்றாக விளையாட வேண்டும் என்று தினந்தோறும் பிரார்த்தனை செய்து வந்த எனது தாயாருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது.

சச்சினுடன் இணைந்து பல ஆண்டுகள் விளையாடியது அற்புதமான அனுபவம். வீரர்கள் அறையில் அவருடன் பழகிய நாட்களை மறக்கவே முடியாது.

அந்த மகத்தான வீரரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் பரப்பிய ஒப்பற்ற தூதர் அவர். அவரது ஓய்வு முடிவு ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே உணர்ச்சிகரமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

மிகப் பெரிய வீரராக இருந்தாலும், இளம் வீரர்களிடம் எந்தவிதமான பந்தாவும் காட்டாமல் சாதாரணமாகப் பழகுவார். உண்மையில், நாங்கள்தான் சற்று அச்சத்துடன் விலகியிருப்போம். அவரது ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்காக பங்களிப்பேன் என நம்புகிறேன் என்றார்.