ஹரியாணா, பஞ்சாபில் கலவரம் : 32 பேர் பலி!!

669

 
பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின், பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பஞ்ச்குலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்குத் தீவைத்த வன்முறையாளர்கள், பொலிஸார் மீது கற்களையும் கம்புகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, வானத்தை நோக்கி சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர். இதனால், பஞ்ச்குலா நகரமே போர்க்களமாக மாறியது.

ராணுவம் குவிப்பு: வன்முறை சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மாநில அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஞ்ச்குலா மட்டுமின்றி சிர்சா உள்ளிட்ட இதர பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சிர்சாவில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

2 ரயில் நிலையங்களுக்குத் தீ வைப்பு: பஞ்சாபின் மாலௌட்இ பல்லுவானா ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு குர்மீத்தின் ஆதரவாளர்கள் தீவைத்தனர்.

மான்ஸா பகுதியில் வருமான வரி அலுவலக கட்டடத்துக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையால் சுமார் 250 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தில்லிஇ ராஜஸ்தானில்…: தில்லியின் லோனி சௌக் பகுதியில் கம்பு, கற்களுடன் திரண்ட குர்மீத் ஆதரவாளர்கள் ஒரு பேருந்துக்கு தீவைத்தனர்.

இதேபோல, ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் பெட்டிகளுக்குத் தீவைக்கப்பட்டது.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர், ஹனுமான்கர் மாவட்டங்களில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், அங்கு செல்லிடப்பேசி இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்கள் வேண்டுகோள்: குர்மீத் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியாணா மனோகர் லால் கட்டர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக தேரா சச்சா அமைப்பினர் 1000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.