அட்டகத்தி படத்தை இயக்கியவர் ரஞ்சித். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு காளி என பெயர் வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் தொடக்க விழாவின்போது டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ‘காளி பட டைட்டில் வைக்காமல் இயக்குனர் பின்வாங்கியது ஏன்? என்று விசாரித்தபோது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
‘காளி என்பது கடவுள் பெயர். சரஸ்வதி சபதம், திருவிளையாடல் என சில பக்தி பட டைட்டில்களை வைத்தபோது எதிர்ப்பு கிளம்பியது. அதுபோல் இதற்கும் எதிர்ப்பு கிளம்பிவிடக்கூடாது என்று எண்ணினர். அது மட்டுமே காரணம் கிடையாது. இன்னொரு காரணமும் உள்ளது.
ரஜினி நடித்த ‘நான் மகான் அல்ல என்ற டைட்டிலை தன் பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்திருக்கிறார். ‘மூன்றுமுகம் படத்தில் ரஜினியின் அதிரடி போலீஸ் கேரக்டரான ‘அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரையும் தனது பட தலைப்பாக வைத்து கார்த்தி நடித்தார். ஆனால் நான் மகான் அல்ல ஓடிய அளவிற்கு அலெக்ஸ்பாண்டியன் ஓடவில்லை. எனவே கதையும் நடிப்பும் நன்றாக இருந்தாலே போதும், படம் ஓடிவிடும். ரஜினி தலைப்பு தேவயில்லை என்று முடிவு செய்துவிட்டார்.
மீண்டும் ரஜினி சம்பந்தப்பட்ட பட டைட்டிலாக வைத்தால் அவரையே ரிப்பீட் செய்வதுபோல் இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே பட டைட்டிலை மாற்ற கார்த்தியும் இயக்குனரும் முடிவு செய்திருக்கிறார்களாம். ரஜினி தலைப்பு இல்லாமலும் தன்னால் வெற்றிப்படம் கொடுக்க முடியும் என நிரூபிக்க கார்த்தி களம் இறங்கிவிட்டார்.