புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியர் மீட்பு!!

1019

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் அடுத்தடுத்து நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவலாக கல்லூரி மாணவர்கள், பள்ளி சிறுவர்கள், இளைஞர்களின் உயிருக்கு உலை வைத்து வரும் புளூவேல் கேம் விளையாட்டால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை பல்கலைக் கழக மாணவரான அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் போரா (வயது 23) என்பவர் புளூவேல் விளையாட்டுக்கு பலியானார்.

இதையடுத்து செல்போனில் ஆன்-லைன் மூலம் புதுவையில் புளூவேல் கேம் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்திக்கு ஒரு பெண் போன் செய்து பேசினார்.

அப்போது அந்த பெண் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அதே வங்கியில் பணிபுரியும் தனது தோழி உப்பளத்தை சேர்ந்த பிரியா (23) என்பவர் புளூவேல் கேம் விளையாடி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் பிரியாவின் செல்போன் நம்பரையும் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி பிரியாவின் செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார்.

ஆனால், புளூவேல் கேம் விளையாடவில்லை என பிரியா மறுத்தார். எனினும் பிரியாவின் செல்போனை போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

பெரும்பாலும் புளூவேல் விளையாட்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் தொடங்கும் என்பதால் பிரியாவின் செல்போனை போலீசார் கண்காணித்த போது நள்ளிரவு 1 மணிக்கு பிறகு பிரியாவின் செல்போன் பிசியாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் பிரியாவின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், வீட்டில் பிரியா இல்லை. அவரது பெற்றோரிடம் விசாரித்த போது நள்ளிரவு முழுவதும் பிரியா விழித்து இருந்ததாகவும், காலை முதல் பிரியாவை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக பிரியா எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே இருப்பதாகவும், எந்த நேரமும் டென்‌ஷனாகவே அவர் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரியாவின் செல்போன் டவரை வைத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போத பிரியா புதுவை கடற்கரையில் நின்றிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் கடற்கரைக்கு சென்று பிரியாவை மீட்டனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்திய போது, அதில் கொடூரமான ரத்தம் சொட்டும் படங்கள இருப்பதை கண்டு போலீசாரே திடுக்கிட்டனர்.

அப்போது புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்டது குறித்து பிரியாவிடம் போலீசார் விசாரித்த போது, அப்போதும் பிரியா இதற்கு மறுத்து போலீசாரிடம் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு போலீசார் கவுன்சிலிங் நடத்தி பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் பிரியாவை ஒப்படைத்தனர்.

தற்போது புதுவையில் அடுத்தடுத்து புளூவேல் கேம் விளையாட்டால் நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.