அசாமில் ஒன்பதாம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவனை பணத்திற்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமை சேர்ந்த சிறுவன் பிரேசெஞ்சித் லகர், இவர் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். இந்த சிறுவன் இம்மாதம் 1ம் திகதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை.
மகனை காணவில்லை என்று அச்சமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். சில நாட்கள் கழித்து, சிறுவனின் வீட்டிற்கு, தாங்கள் சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவன் உயிருடன் திரும்பவேண்டுமேன்றல் 15 இலட்சம் ரூபாய் பணம் வேண்டுமென்றும் கூறி ஒரு தொலைபேசி அழைப்பும், எஸ்.எம்.எஸ் செய்தியும் வந்துள்ளது.
தொலைபேசி எண்ணை வைத்து பொலிசார் விசாரித்தப்போது 5 சிறுவர்கள் பிடிப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறுவனை சோனாப்பூர் என்னும் இடத்திற்கு அழைத்து செல்வதாக் கூறி, அவனை கடத்தியுள்ளனர்.
பின்னர், அச்சிறுவனை பாதுகாப்பதில் சிக்கல் வந்ததால் ஐந்து பேரும் சேர்ந்து அவனை கொன்றுவிட்டு வீடு திரும்பினர்.
விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கூறிய தகவல்கள் படி, பலியான சிறுவனின் புத்தகப்பை, உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
சிறுவனின் சடலம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





