சச்சினின் ஓய்வு பற்றி தோனி என்ன கூறினார் தெரியுமா?

297

sachineஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடயம் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட்களுக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து இந்திய தலைவர் தோனி என்ன கூறுவார் என்பதே.

கடைசியாக தோனி நேற்று சச்சின் ஓய்வுபற்றி மனம் திறந்து கூறிவிட்டார்.

சச்சின் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

“எனக்கு தெரியும் இது (ஓய்வு அறிவிப்பு) வரும் என்று. நான் அவரது முடிவை மதிக்கிறேன், அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக ஒரு கிரிக்கெட் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

கிரிக்கெட் காலம் முழுதும் டாப் பொசிஷனிலேயே இருந்திருக்கிறார். 23 ஆண்டுகளாக அவர் முதன்மை நிலையிலேயே இருந்துள்ளார்.

இந்திய இரசிகர்கள், தங்களது எதிர்பார்ப்புகளை உயர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் சச்சின் அவர்களது எதிர்பார்ப்புகளை தன்னுடனேயே சுமந்து சென்றார்.

இத்தனை சுமைகளையும் தாங்கி, பூர்த்தி செய்து இவ்வளவு சாதனைகளை செய்திருப்பது உண்மையில் அசாத்தியமானது, அபூர்வமானது.

இந்தத் தருணத்தில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை அவர் முழுதும் மகிழ்ச்சியுடன் எந்த வித எதிர்பார்ப்புகளின் சுமைகள் இல்லாமல் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தத் தருணத்தில் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்டேடியம் நிரம்பி வழிவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இப்போது கூட்டத்தை நான் டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியவில்லை எனில் அடுத்த 25- 30 ஆண்டுகளுக்கு ஃபுல் ஸ்டேட்டியம் நிரம்பி வழியும் ஒரு டெஸ்ட் போட்டியை நான் பார்க்கமாட்டேன் என்றே நினைக்கிறேன்.

ஒரு அணியின் டாப் பேட்ஸ்மெனாக இருக்கும்போது அதுவும் ஒரு நீண்ட காலத்திற்கு இருக்கும்போது அனைவரும் ஒருவரது ஆட்டத்திறனை ஆய்வு செய்வார்கள், கேள்வி கேட்பார்கள். நீங்கள் ஓட்டங்கள் அடித்தாலும் சரி அடிக்காவிட்டாலும் சரி.

இவ்வாறு கூறினார் தோனி.