2 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்து நீச்சல் போட்டியில் உலக சாதனை செய்த 6 வயதுச் சிறுமி..!

572

swim

சர்வதேச நீச்சல் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி ஜெ. திவ்ய பிரபா சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலேயே கடலில் நீந்தி சாதனை புரிந்துள்ள இந்த மாணவிக்கு குற்றாலீஸ்வரன்போல சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை.

திருநெல்வேலி, சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெகன் செல்வகுமார், ஸ்ரீரங்கநாச்சியார் தம்பதியின் மகளான திவ்ய பிரபா, பாளையங்கோட்டை மகாராஜநகர் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது மகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக நான்கரை வயதில் திவ்ய பிரபாவை நீச்சல்குளத்துக்கு அழைத்துச் சென்றார் ஜெகன் செல்வகுமார். பயமே இல்லாமல் அசாத்தியமாக திவ்ய பிரபா நீந்தியதைக் கண்டு பயிற்சியாளர்கள் அவரை ஊக்குவித்தனர்.
இதையடுத்து தினமும் காலையில் ஒரு மணி நேரம், இரவு 2 மணி நேரம் என நீச்சல் கற்று முதன்முதலாக 2012-ல் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இதில், 3 பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
அக்டோபர் 2012-ல் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று ஒரு பிரிவில் தங்கமும், மற்றொரு பிரிவில் வெண்கலமும் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு பென்டத்லான் அமைப்பும் கடந்த பிப்ரவரியில் நடத்திய போட்டியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார்.

கோவாவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 4-ஆவது இடம் பிடித்து சர்வதேச அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

சைப்ரஸ் நாட்டில் லிமஷாயில் சர்வதேச பயத்லான் போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை நடைபெற்றன. இதில் பெற்றோருடன் பங்கேற்கச் சென்ற திவ்ய பிரபாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை நீச்சல் குளத்தில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே நீந்தியதால் தங்களது மகளால் கடலில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க முடியுமா என யோசித்தனர்.

ஆனால், திவ்ய பிரபா சந்தோஷமாக நீந்தத் தயாரானதால் அவருக்கு 2 நாள் மட்டும் கடலில் நீந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்த சர்வதேச பயத்லான் போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் கலந்துகொண்டு 13-ஆவது இடம் பிடித்தார்.

இந்திய அளவில் 6 வயதில் உலக சாதனை புரிந்த மாணவி என்ற பெருமையையும் சேர்த்துள்ளார். இந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் இயக்குநர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஏ. ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நீச்சல் மட்டுமல்லாமல் பாட்டு, பரதம் உள்ளிட்டவற்றையும் திவ்ய பிரபா ஆர்வத்துடன் கற்பதாக பெற்றோர் பெருமிதம் தெரிவித்தனர். கடலில் நீந்தி பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய குற்றாலீஸ்வரன் போல ஆக வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் திவ்ய பிரபா.