தென்கிழக்கு டில்லியின் ஜாமியா நகர் பகுதியில், விடாமல் அழுத குழந்தையை அடித்து துன்புறுத்தி கழிவுநீரோடையில் வீசி கொலை செய்ததாக அதன் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவித்தபோது..
ரஷீத் ஜமால் (40) என்ற அந்த நபருக்கு மோஃபிதா பேகம் (32) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
குப்பைகள் சேகரிக்கும் தொழிலில் இந்தத் தம்பதியினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மோஃபிதா பேகம் கடந்த 19ம் திகதி நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் ஒன்றை தெரிவித்தார். அதன்படி ரஷீத் மது அருந்திய நிலையில் பேகத்தை அடித்துள்ளார். பின்னர் தனது இரு மகன்களையும் அடித்துள்ளார். அப்போது, உடல் நலக்குறைவுடன் இருந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரஷீத் அக் குழந்தையின் தலையை தரையில் மோதியுள்ளார். பேகம் தடுத்தும் ரஷீத் கேட்காததை அடுத்து, அண்டை வாசிகளிடம் உதவி கேட்க பேகம் சென்றார். அப்போது ரஷீத் அந்தப் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து பேகம் அளித்த தகவலின்பேரில், ரஷீத் கண்டுப்பிடிக்கப்பட்டார். குழந்தை குறித்து கேட்டதற்கு, அருகில் உள்ள கழிவு நீரோடை அருகே குழந்தையை விட்டுவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், குழந்தையை கடத்தியதாக ரஷீத் கைது செய்யப்பட்டார்.
டில்லி தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், நீச்சல் வீரர்கள் உதவியுடன் கழிவுநீரோடைப் பகுதியில் குழந்தை தேடப்பட்டது. அங்கு தேடி கிடைக்காத நிலையில், ரஷீதிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, வேறு ஒரு கழிவு நீரோடையில் குழந்தையை வீசியதாக வியாழக்கிழமை காலையில் ரஷீத் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் தேடியபோது, கழிவுநீரோடையில் இருந்து அந்தக் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து ரஷீத் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று பொலிசார் தெரிவித்தனர்.






