வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமணை சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு!!

641

 
வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (24.09.2017) மாலை 6.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் முஸ்தபா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக , அரசியல் பிரமுகர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் , அமைச்சின் உத்தியோகத்தர்கள், சுகாதார தொண்டர்கள், பொதுமக்கள் , இரானுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, நிரந்தர நியமனம் கோரி தொடர்ச்சியாக போராடிய நிலையில் மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கைவிட்டிருந்த சுகாதார தொண்டர்கள் தமது நியமனம் தொடர்பில் கேட்டுக் கொள்வதற்கும், மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கும் முயன்ற போது சுகாதார அமைச்சர் ராஜித அவர்களை சந்திக்காதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காதும் உடனடியாக வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பில் சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கையில்,

தாம் தொடர்ச்சியாக நிரந்தர நியமனம் கோரி போராடி வந்த நிலையில் ஓரு மாத காலத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்திற்கு அமைவாக எமது போராட்டத்தை கைவிட்டிருந்தோம்.

இன்று மத்திய சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளித்து எமது நியமனம் தொடர்பில் கேட்டறிவதற்காக பல மணிநேரமாக காவல் இருந்த போதும் எம்மை சந்திக்காது சுகதார அமைச்சர் சென்று விட்டார். இதனால் மிகுந்த மனவருத்த்துடன் நாம் இரவு வேளையில் வீடு திரும்புகின்றோம் எனத் தெரிவித்தனர்.