கல்லைப் போல் இறுகும் உடல்: அரிய வகை நோயால் அவதிப்படும் பெண்!!

266

 
கைகளில் வலிக்கும்போது, விரைவில் என் உடம்பு கல்லைப்போல மாறிவிடும் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது. இதைச் சொல்வது 37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது.

காலப்போக்கில் கடினமான கல் போன்று மாறக்கூடிய `ஸ்க்லெரோட்ர்மா` (Scleroderma) என்ற குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டார் ஜெய் விர்தி. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜெய் விர்தியின் தோல் மற்றும் மூட்டுகள் கடினமாகிவிட்டன, நோயின் பாதிப்பு நுரையீரல்களுக்கும் பரவிவிட்டது. இவரின் உடல் நிலை மேலும் மோசமாகும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எதிர்காலம் பிரகாசமானதாக இல்லாவிட்டாலும் கல்லாகாமல் இருந்தால் போதும் என்று நினைக்கிறார் ஜெய் விர்தி. இந்த நோய், அருகில் இருக்கும் கடைக்கு செல்வதையும் தடுக்குமா, இல்லை மூச்சு விடுவதையும் சிக்கலாக்குமா? எதிர்காலத்தில் எதுபோன்ற பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும் என்பது புரியாத புதிராக உள்ளதாக சொல்கிறார் அவர்.

இயல்பான ஆடைகளில் வெகு இயல்பாக தோற்றமளிக்கும் ஜெய் விர்தியின் உடலுக்குள் பல பிரச்சனைகள். ஆடைகளுக்குள் அடங்கியிருக்கும் உடலுக்குள் ஏற்படும் வேதனைகளை தான் மட்டுமே உணரமுடியும் என்கிறார் விர்தி.

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட விர்தியின் பல கனவுகள் கலைந்து போய்விட்டன. திருமணம், குழந்தை என்ற இயல்பான ஆசைகளும், கனவுகளும் இவருக்கு கானல் நீராகிவிட்டது. ஜெய் விர்தி கூறுகிறார், ”என் முழு உடலும் ஒருநாள் கல்லாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்னால் சிரிக்கக்கூட முடியாது, கற்சிலையாகிவிடுவேன். சிற்பியால் செதுக்கப்படாத, நோயால் வடிக்கப்பட்ட சிலையாகிவிடுவேன்.

இப்போது இப்படி வருத்தப்படும் ஜெய் விர்தி, நோயால் பாதிக்கப்படுவதற்குக் முன்னர் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தார். 2010ஆம் ஆண்டு இடைநிலை பள்ளியில் தொழில்நுட்ப கல்வி ஆசிரியராக பணியாற்றிய விர்தி, விடுமுறைகளில் சுற்றுலா செல்வதில் ஆவல் கொண்டவர். ஒரு விடுமுறையின்போது கிரேக்க நாட்டு தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, விர்தியின் உடலில் சில மாறுதல்கள் இருப்பதை அவரது தோழி கைரோலீன் பார்த்தார்.

தனது தோலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அதை விர்தி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது சாதாரணமான தோல் பிரச்சனையாக இருக்கும் என்றே அவர் அலட்சியமாக நினைத்தார். நோயின் தாக்கம் தெரிந்தது தன்னை மோசமான நோய் தாக்கியிருப்பதை மூன்று ஆண்டுகள் கழித்தே உணர்ந்தார் ஜெய் விர்தி.

சுற்றுலாவின்போது தோலில் மாற்றம் ஏற்பட்டதை முதல்முறையாக கவனித்த பிறகு அவர் பல மருத்துவர்களை சந்தித்து ஆலோசித்தார். பல பரிசோதனைகளை மேற்கொண்டார். நாளடைவில் பல பிரச்சனைகளை சந்தித்த அவருக்கு பேனாவை பிடிப்பது, கணினியைக் கையாள்வது போன்றவையும் சிக்கலானது.

சுமார் 18 மாதங்கள் மருத்துவர்களை பார்ப்பதும், பரிசோதனைகள் செய்வதுமாக இயல்பாகவே இருந்தேன். ஆனால் திடீரென ஒருநாள் எனக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகம் எழுந்தது. அந்த நொடி இப்போதும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்த சமயத்தில் கார் ஓட்டிக் கொண்டிருந்த என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது’ என மனம் துடிக்கிறார் ஜெய்விர்தி.

பிறகு தனது மருத்துவரிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி வெளிப்படையாக சொல்லுமாறு கேட்டிருக்கிறார். மருத்துவர்கள் அவரது சந்தேகங்களை உறுதி செய்தார்கள். இருந்தாலும் மனம் தளாராமல் இயல்பான வாழ்க்கையில் விர்தி ஈடுபட்டிருந்தார். ஆனால், உடலில் ஏற்பட்ட மாறுதல்களாலும், வேதனையாலும் ஆசிரியர் பணியில் இருந்து மட்டுமல்ல இயல்பான வாழ்க்கையில் இருந்து மட்டுமல்ல, எதிர்கால கனவுகளில் இருந்தும் விலகி நிற்க வேண்டியதாயிற்று.

விர்திக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்பட்டிருப்பதை அவருடைய நண்பர்களால் நம்பமுடியவில்லை. ‘இந்த நோயின் பாதிப்பு வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது, இது நான் மட்டுமே உணரக்கூடிய விசித்திரமான நோய்” என்கிறார் ஜெய் விர்தி.