காலையில் உயிரிழந்த நபர் மாலையில் உயிர்பிழைத்த அதிசயம் : பின்னர் நேர்ந்த சோகம்!!

534

மயங்கி விழுந்து காலையில் இறந்த ஆட்டோ டிரைவர் மாலையில் உயிர்பெற்று மீண்டும் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் அய்யம்பட்டியை சேர்ந்தவர் அறிவுச்செல்வம் (33) ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை, அந்த பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதையடுத்து அவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதற்கிடையில், சுமார் 8 மணி நேரம் கழித்து அறிவுச்செல்வத்தின் கை, கால்களில் திடீரென அசைவு ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ந்த உறவினர்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் அறிவுச்செல்வத்துக்கு நாடித்துடிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்து அம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அம்புலன்ஸ் வர நேரமானதால் ஜீப்பில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அம்புலன்ஸ் வந்த நிலையில் அறிவுச்செல்வத்தை அதில் ஏற்றி கொண்டு மருத்துவமனை சென்றனர்.

அங்கு அறிவுச்செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அறிவுச்செல்வம் உயிர் பிழைத்ததால் உறவினர்கள் அடைந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள் நிலைக்காமல் போனது.