சினிமா பாணியில் 125 பவுண் நகைகள் கொள்ளை : மூன்று மணி நேரத்தில் நகைகளை மீட்ட பொலிஸார்!!

543

 
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லடி பாலத்திற்கு அருகில் புதிய டச்பார் வீதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் அப்படியே கொள்ளையிட்டு செல்லப்பட்டிருந்தது.

சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையினை தொடர்ந்து குறித்த நகைப் பெட்டகம் திருகோணமலை – திரியாய காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் நகைப் பெட்டகத்தை மீட்டு வந்ததுடன், பொலிஸாரினால் நகைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த மூன்று மாதங்களாக குறித்த வீட்டில் இருந்து திட்டங்களை தீட்டிய இளைஞர்கள் இந்த கொள்ளை முயற்சினை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று தினங்களாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நான்கு இளைஞர்கள் மட்டுமே இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குறித்த நகைப் பெட்டகம் கொள்ளையடித்து செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கல்லடி கடற்கரையில் புதைத்திருந்த நிலையில், மீண்டும் அவற்றினை எடுத்துக் கொண்டு திருகோணமலை திரியாய காட்டுப்பகுதியில் புதைத்து வைத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.