மகளுக்கு நிச்சயதார்த்தம் :  நளினிக்கு பிணை மறுப்பு!!

1722

சொந்த வீடு இல்லாததால் நளினிக்கு பிணை  மறுக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், ஆண்கள் மத்திய சிறையில் முருகனும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 27 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர்.  பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் 2 மாதம் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நளினியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகளை கவனிக்க நளினி 6 மாதம் பிணை கோரி சிறை துறையில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கையில், நளினி கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகள் திருமணத்திற்கு அவர் 6 மாதம் பிணை  கேட்டு மனு அளித்திருந்தார்.

அது தொடர்பாக விசாரித்த சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள், நளினிக்கு சென்னை மற்றும் வேலூரில் சொந்தமான வீடுகள் இல்லை.  எனவே அவருக்கு பிணை வழங்கக் கூடாது என சிறை நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்.சொந்த வீடு இல்லை என்பதற்காக பிணை மறுப்பது தவறானது.

இதுதொடர்பாக முதல்வர், சட்டத்துறை அமைச்சரை சந்தித்து நளினிக்கு 6 மாதம் பிணை வழங்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம். முருகனும் தனது மகள் திருமணத்திற்காக 1 மாதம் பிணை கேட்டு மனு அளிக்க உள்ளார் என்றார் புகழேந்தி.