பாகிஸ்தானில் காரை விட மாடுகளின் விலை அதிகமாம்..!

518

cowபக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுப்பதற்காக, பாகிஸ்தானில் ஆடு, மாடுகளின் விலை இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் முன்னணி நிறுவனத்தின் கார் விலையே ரூ.7 இலட்சம் தான். ஆனால், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு, மாடுகளின் விலை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.16 இலட்சம் வரை இருந்தது.

கடைசி நேரத்தில் சந்தையில், ஆடு-மாடுகள் கிடைக்காததால், சில இடங்களில் குர்பானிக்காக வாங்கி வைத்திருந்த கால்நடைகள் திருடப்பட்ட சம்பவமும் நடந்துள்ளன.

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இம்ரான் பர்கத் ரூ.1 லட்சம் கொடுத்து சில ஆடுகளை வாங்கி லாகூர் வாலன்சியா நகரில் உள்ள தனது வீட்டில் கட்டி இருந்தார்.

ஆனால், இரவோடு இரவாக அந்த ஆடுகளை யாரோ திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான தகவல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பாகி வந்தன.

விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சில ஆடுகள் ஸ்பிரைட் குளிர்பானம் குடித்ததையும், பான் பீடா மென்ற காட்சிகளும் தொலைக்காட்சி செய்தியில் இடம்பெற்றிருந்தன.

அவற்றில் ஒரு ஆட்டின் விலை ரூ.6 லட்சம் என்றும், அதிகபட்சமாக ஒரு எருமை மாட்டின் விலை ரூ.16 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கால்நடைகள் உங்கள் வீடு தேடி வரும் என்ற விளம்பரங்களுடன் இணைய தளம் மூலமான வர்த்தகமும் இந்த ஆண்டு பாகிஸ்தானில் கொடி கட்டிப் பறந்தது.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் மட்டும் 70 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான கால்நடைகள் குர்பானி கொடுக்கப்பட்டதாக, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.