வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று (21.10.2017) நடைபெற்ற ஜனாதிபதியின் நில மெஹவர எனும் நடமாடும் சேவைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையின் போது வவுனியாவில் இரு பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் அமைத்து தருவதாக வாக்குறிதியளித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நான் இந்த பாடசாலைக்கு வந்ததன் பின்னர் இந்த பாடசாலையில் இருக்கக்கூடிய குறைபாடுகள் சம்பந்தமாக இந்த வித்தியாலயத்தின் அதிபர் எனக்கு தெரிவித்தார். இவற்றுள் பல்வேறு விதமான வேண்டுகோள்கள் இருக்கின்றன. ஆனால் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒரு வேண்டுகொள் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் அதிபர் பிரதமரிடம் வேண்டுகோளை விடுத்தமையை நான் கண்டேன். நானும் பிரதமரும் பேச்சுவார்தை நடத்தி அவரின் அந்த வேண்டுகோளில் முதலாவது வேண்டுகோளை இப்போதே வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த முதலாவது வேண்டுகோள் தான் இந்த பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடம் வேண்டும் என்றார்கள் அதை நாங்கள் பெற்றுத்தருவோம்.
அதே போன்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் என்னை சந்தித்துப் பேசினார். இதற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு பாடசாலை(வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) அது ஒரு ஆண்கள் பாடசாலை அங்கும் ஒரு கேட்போர் கூடம் இல்லை இங்கு 3000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என தெரிவித்தார். அந்த பாடசாலைக்கும் ஒரு கேட்போர் கூடத்தினை வெகு விரைவில் அமைத்துத்தருவேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.






