குப்பையில் கிடப்பதை சாப்பிட்டேன் : சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண்ணின் சோகம்!!

518

சவுதிக்கு வேலைக்கு சென்ற கேரள பெண் ஒருவர் ஆறு மாத போராட்ட வாழ்க்கைக்கு பின்னர் தனது சொந்த ஊருக்கு பத்திரமாக திரும்பியுள்ளார்.

கேரளாவில் உள்ள பாலோடி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா (38), இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மஞ்சுஷாவின் கணவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில் அங்குள்ள ஒரு கடையில் மாதம் ரூ.5000 சம்பளத்தில் மஞ்சுஷா வேலை செய்துவந்தார். அந்த பணம் குடும்ப செலவுக்கே போதாத நிலையில், தனது மகள்களின் வருங்கால வாழ்க்கையை கணக்கில் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து பணம் சம்பாதிக்க மஞ்சுஷா முடிவெடுத்தார்.

இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மணிலால் என்பவர் தான் சவுதியில் கார் ஓட்டுனராக வேலை செய்யும் வீட்டில் வீட்டு வேலைக்கு வருமாறு மஞ்சுஷாவை அழைத்துள்ளார்.

இதையடுத்து பலரிடம் கடன் வாங்கி மஞ்சுஷா சவுதி சென்றுள்ளார். அங்கு தான் அனுபவித்த பல்வேறு கொடுமைகளை பற்றி அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு தற்போது வந்துள்ள மஞ்சுஷாவே கூறுகிறார்.

சவுதிக்கு செல்ல ஆரம்பத்தில் பல தடைகள் வந்தது, எப்படியோ தனியார் ஏஜன்சி ஒன்றின் மூலம் சவுதி விமான நிலையத்துக்கு கடந்த மார்ச் 20ஆம் திகதி வந்தேன். அங்கு மணிலால் ஏற்கனவே நின்றிருந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒருவரின் காரில் இருவரும் ஏறினோம்.

கார் சென்று கொண்டிருந்த போது நடுவழியில் மணிலால் இறங்கிவிட்டார். அப்போது தான் அவர் வேலை செய்யும் இடத்தில் தனக்கு வேலை வாங்கி தருவதாக பொய் வாக்குறுதியை அளித்தார் என்பதை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த இன்னொரு நபர் ஒரு பெரிய வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு 16 குழந்தைகள் உட்பட மொத்தம் 32 பேர் இருந்தார்கள்.

குழந்தைகளை பார்த்து கொள்வது, துணிகளை துவைப்பது, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வது என ஒருநாளுக்கு 20 மணி நேரம் வேலை செய்ய வைத்தார்கள்.

என் மகள்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு கஷ்டப்பட்டு உழைத்தேன். எனக்கு மாதம் 24,200 ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், வேலைக்கு சேர்ந்த பின்னர் 20,800 ரூபாய் தான் கொடுப்பேன் என்றார்கள்.

சரி என சம்மதித்தேன். ஆனால் முதல் மாத சம்பளத்தை கொடுக்காமல் இரண்டாம் மாதத்தில் ரூ.17000 சம்பளத்தை மட்டுமே என் தந்தை வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.

அடுத்த இரண்டு மாதத்துக்கு சம்பளம் தராத நிலையில் வீட்டு உரிமையாளரிடம் சம்பளம் தரும்படி கெஞ்சினேன், அவர் குறைவாகவே கொடுத்தார். இப்படி தான் ஆறு மாதம் வேலை செய்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென என்னை அடிப்பார்கள்.

பல சமயம் சாப்பிட உணவு தராமல் பட்டினி போடுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டில் இருக்கும் மிச்ச உணவுகளையும், குப்பை தொட்டியில் இருக்கும் உணவுகளை சாப்பிடுவேன்.

எப்படியாவது சொந்த ஊருக்கு உயிரோடு சென்றுவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். இரண்டு முறை அங்கிருந்து தப்பிக்க முயன்று மாட்டி கொண்டேன். அவர்கள் என்னை கொடுமையாக அடித்தார்கள்.

எப்படியோ மூன்றாம் முறை தப்பித்து அங்கிருந்த இந்தியர்களுக்காக வேலை செய்யும் என்.ஜி.ஓ-விடம் அடைக்கலம் பெற்றேன். பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்து எப்படியே கடந்த 12 ஆம் திகதி சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன் என கூறியுள்ளார்.

சவுதிக்கு செல்வதற்காக பலரிடம் அதிகளவில் கடன் வாங்கியுள்ள மஞ்சுஷா அதை எப்படியாவது திருப்பி தர வேண்டும் என முயன்று வருகிறார்.

சவுதிக்குச் சென்றதில் அதிக கடன் ஏற்பட்டதோடு, உடலும், மனமும் காயமடைந்துள்ளது தான் மிச்சம் என மஞ்சுஷா வேதனையுடன் கூறுகிறார்.