குண்டு வெடிக்க செய்து கொலை : இருவருக்கு 35 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை!!

610

குண்டு வெடிக்க செய்து கொலை : இருவருக்கு 35 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை!!
குருணாகல் – வெல்லவ கொடயாய தோட்டத்தின் காவலாளியை குண்டு வெடிக்க செய்து கொன்றதுடன், அவரது மனைவியின் கண்ணை குருடாக்கிய இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குருணாகல் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர நேற்றைய தினம்(26) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குண்டு, வெல்லவ கொடயாய தோட்ட அத்தியட்சகரை கொலை செய்ய எடுத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றம் சம்பந்தமாக குருணாகல் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று போரில் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவலாளியின் மனைவியின் கண்ணை குருடாக்கிய குற்றத்திற்கு இரண்டு பேருக்கும் தலா ஏழு நாட்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முறைப்பாட்டாளர் தரப்புக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என்று குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை தவிர இருவருக்கும் தலா ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வெல்லவ மராகம பிரதேசத்தை சேர்ந்த கனுபால வீரதுங்க மற்றும் மைக்கல் டயஸ் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மராகம பிரதேசத்தை சுமண சந்திர கமகே என்பவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் கொடயாய தோட்டத்தில் குற்றவாளிகள் இந்த குற்றத்தை செய்துள்ளனர்.

குற்றம் நடந்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.