யாழ்ப்பாணம், அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
தாய், மகள் மற்றும் இரு மகன்மாரின் சடலங்கள் இன்று பிற்பகல் அவர்களது வீட்டிலிருந்து மீக்கப்பட்டன.
28 வயதான இளம் தாயும் 4 வயது பெண் பிள்ளையும், 2 மற்றும் 1 வயது ஆண் குழந்தைகளுமே இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த கோர சம்பவம் யாழ் குடாநாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் ஐஸ்கிரிம் கொள்வனவு செய்த தாயார் அதற்குள் விஷம் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார். பின்னர் பாயில் உறங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாட்களில் அந்த வீட்டில் கேட்கும் சத்தம் இன்றைய தினம் கேட்காதமையினால் அந்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போது நால்வரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வருவதனை அவதானித்தவர்கள் யாழ். பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் போது அவர்கள் உயிரிழந்திருந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த பிள்ளைகளின் தந்தை வேலை செய்யும் தங்க விற்பனை நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் பொட்டாசியம் வகை திரவம் ஒன்றை குடித்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாயாரும் அதே திரவத்தை ஐஸ்கிரிமில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு தானும் அருந்தி தற்கொலை செய்துள்ளதாக தாயாரின் சகோதரர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
காசு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக இந்த தற்காலை இடம்பெற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தற்கொலை செய்த கொண்ட பெண்ணின் சித்தி மற்றும் தாயார் ஆகியோர் கருத்து வெளியிடுகையில், தற்கொலை செய்த பெண்ணின் கணவர் நம்பிக்கை அடிப்படையில், ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாவை தனது நண்பருக்கு கொடுத்தார்.
ஆறு மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் பணம் திருப்பி கொடுக்கவில்லை. கேட்கப்போனால் ஏமாற்றுக் கதைகள் கதைத்து கடைசிவரை காசு கொடுக்கவில்லை.
காசு கடனாகக் கொடுக்கும்போது நண்பணின் மனைவி, அண்ணன் மற்றும் அண்ணி ஆகிய மூன்று பேரின் முன்னிலையில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆறு மாதத்துக்குப் பிறகு காசு குறித்துக் கேட்டபோது காசோலையிலிருந்து காசு திரும்பி விட்டது. அவர் காசு போடவில்லை. இது குறித்து விசாரித்தபோது பணத்தை கடனாக பெற்றவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசு வாங்கியவரின் மனைவியிடம் சென்று, பணம் கேட்டபோது, பணம் கொடுத்தமைக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்தவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் பிள்ளைகளையும் தாயையும் மிகவும் கவனமாகப் பார்க்குமாறு வைத்தியசாலையில் எங்களிடம் மிகவும் வற்புறுத்திக் கூறி அனுப்பினார்கள். அப்படித்தான் இவ்வளவு நாளும் இவர்களைக் கவனமாகப் பார்த்துப் பார்த்துவந்து இன்றைக்கு நான் வேலைக்கு போன பிறகு இது நடந்திருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட பெண், தனது அம்மாவைப் படுக்குமாறு கூறிவிட்டே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார். இது அவர்களின் வீடுதான், நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று கண்ணீரோடு கூறினார்.








