சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் இன்று கலைக்கப்பட்டது!!

566

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 3 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைட்டம் நிறுவனம் கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சைட்டம் நிறுவன மருத்துவ பீடம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்ப்புகளே இன்று வெளியாகி உள்ளன.

இதில் சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கான பரிந்துரையை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ளது.

இதற்கமைய சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இலாபத்தை இலக்காக கொள்ளாத புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, இலங்கை மருத்துவசபையின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்து மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பணி தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான குறைந்தபட்ச தரநிர்ணயங்கள் அடங்கிய வர்த்தமானி, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அரச பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பல போராட்டங்களை நடத்தினார்கள்.

நாடளாவிய ரீதியில் உண்ணாவிரதம், போராட்டங்கள், பேரணி என அனைத்தையும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதல்களுக்கு உள்ளாகினார்கள். பெண்கள், ஆண்கள் மற்றும் பௌத்த துறவிகள் என அனைவரையும் இதன்போது பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த நிலையில் சைட்டம் பிரச்சினை நாட்டில் பூதாகரமான ஒன்றாக மாறியது. இதையடுத்து சைட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.