சித்தி, மைத்துனரால் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி: வைத்தியசாலையில் அனுமதி!!

522

 
பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் 10 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் சித்தியும், மைத்துனரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட தர்மராஜ் சர்மிலா என்ற 10 வயதுடைய குறித்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், அவரது தந்தையும் கொழும்பில் பணி புரிந்து வருகின்றார்.

இந்த சிறுமி கடந்த ஒன்பது வருடங்களாக தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் குறித்த சிறுமியை அவரது சித்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு பாட்டி கொழும்புக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியின் கல்வி நடவடிக்கைகளிற்காகவும், சிறுமியின் உணவு போன்ற செலவுகளுக்கும் மாதாந்தம் அவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுமியின் சித்தி சிறுமியை வீட்டு வேலைகளைச் செய்ய துன்புறுத்தியும், தடியினால் தாக்கியும் கொடுமை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணமாக குறித்த சிறுமியின் சித்தியும், மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும், இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.