வடக்கில் கடந்த 9 மாதங்களில் 90 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்!!

717

வடக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களில் 90 சிறார்கள் பல்வேறு வகையில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காப்பகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அங்கு முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய யாழ் மாவட்டத்தில் 30 சிறார்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறார்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறார்களும், வவுனியா மாவட்டத்தில் 17 சிறார்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 சிறார்களும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த காலத்தில் வடக்கில் 27 சிறார்களுக்கு பாலியல் விடயங்களை அடிப்படையாக கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சில சம்பவங்கள் அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு காரணங்களினால் பொலிஸாருக்கோ, ஏனைய தரப்புக்கு தெரியவருவதில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.