டெங்கு நோயின் தீவிரம் : நான்கு மடங்காக அதிகரித்த உயிர்ப் பலி!!

719

இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 395 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் மூன்று மடங்கு அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த ஆண்டிலேயே, அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிகளவான மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67,198 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 395 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றும் நாளையும், தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு சிறப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், கல்முனை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.