வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் பற்றிய கருத்து முரண்பாடானது : அதிபர் விளக்கம்!!

337

vavuniya22வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 8 ஆம் திகதி உலக ஆசிரியர் தின நிகழ்வு நடைபெற்றபோது மாணவர்கள் சிலரிடையே காணப்பட்ட குழப்பநிலையை ஆசிரியர்கள் சீர் செய்தவேளை , துரதிஷ்டவசமாகக் காயமடைந்த மாணவன் குடிபோதையில் இருந்ததாகத் தவறான செய்தி பரவியிருந்தமை வருத்தத்திற்குரியது என்று அந்தப் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

உலக ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் 5ம் திகதியும் , அந்நிகழ்வை இலங்கையில் ஒக்டோபர் 6ம் திகதியும் செயற்படுத்தும் வகையில் வருடம்தோறும் நடைபெறுகின்றது.

இவ்வருடம் ஒக்டோபர் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வந்த காரணத்தினால் ஒக்டோபர் 8ம் திகதி எமது பாடசாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலைப் பிரார்த்தனையின்போது சகல ஆசிரியர்களும் மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர் .

இக் கௌரவிப்பும் , ஆசிர்வாதமும் சகல மாணவர்களும் பங்கு கொள்ள முடியாததால் காலப் பிரார்த்தனையின் பின்பு ஒவ்வொரு வகுப்பறைகளிலும் நடைபெறுவது வழக்கமாகும் . இந்நிகழ்வு சகல வகுப்புக்களிலும் நடைபெறுவதால் , அன்றைய தினம் பாடங்கள் நடைபெறாது , மாணவர்கள் தத்தமது வகுப்பறைகளில் வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள், முகாமைத்துவ அணியினர் அனைவரிடமும் ஆசிகளைப் பெற்றுக் கொண்ருக்கும் வேளையில் குறித்த ஒரு தொகுதி உயர்தர வகுப்பு மாணவர்கள் ஒரு சிலரிடையே குழப்பநிலை காணப்பட்டுள்ளது .

இதனை அவதானித்த உயர்தர வகுப்பாசிரியர்கள் சிலர் இக்குழப்ப நிலையைச் சீர் செய்வதற்கு முயன்று அதனை சகஜநிலைக்குக் கொண்டு வந்திருந்தனர் . அந்நிகழ்வின்போது மாணவன் ஒருவர் துரதிஷ்டவசமாகவும் தற்செயலாகவும் காயமடைந்தார் . ஆனால இம்மாணவன் குடிபோதையில் இருந்ததாக தவறான செய்தி வவுனியாவில் பரவியுள்ளது வருந்தத்தக்கது.

எனவே எமது சமூகத்தின் முக்கியமான பிரஜைகளை உருவாக்கி சிறந்த கல்விப் பெறுபேறுகளை வழங்கி வருகின்ற மாவட்டத்தின் முக்கியமான கல்விச் சாலையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இப்பாடசாலையின் முகாமைத்துவ அணியினருடன் இணைந்து பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தகப் பெருமக்கள், ஊடகத்துறையினர் அனைவரதும் பங்களிப்பு எமக்கு வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிபிட்டார்.