பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட எனது மகள் ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவேண்டும், அவளுடைய துயரச் சம்பவம் மக்கள் மனங்களில் இருந்து அகன்று வருகிறது என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்த அவர், கணவனைப் பிரிந்து வாழ்ந்த எனக்கு உதவியாக எனது மகளே இருந்தார். இன்று அவர் இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது.
பாடசாலைக்குப் போகவில்லை என்று வீட்டில் இருந்தவரை சடலமாகவே கண்டேன். அவரைச் சிதைத்தவர்கள் வெளியில் நடமாடுகின்றனர். அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
ஹரிஸ்ணவிக்காகப் போராடிவர்களுடைய மனங்களில் இருந்து அவள் மெல்ல, மெல்ல விலகுகின்றாள். குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது. இதுபோன்ற சம்பவம் நடை பெறக் கூடாது என்றால் ஹரிஸ்ணவிக்கு நீதி கி்டைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஹரிஸ்ணவி கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அன்றையதினம் பாடசாலை செல்ல மறுத்து தனியாக இருந்த போதே அந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
சிறப்பு விசாரணையை மேற்கொண்ட அதிகாரி ஹரிஸ்ணவியின் உடலில் நகக் கீறல் இருப்பதாகவும், அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுத்தப்பபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பவத்தின் பின்னர் வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணம் எங்கும் நீதிகோரிப் போராட்டங்கள் இடம்பெற்றன. குற்றவாளி கைது செய்யப்படவேண்டும்,தண்டிக்கப்படவேண்டும் என்று பலத்த கோசங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஹரிஸ்ணவி வீட்டுக்கு, அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளில் அவர் 6 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ‘‘ஹரிஸ்ணவியின் வீட்டாருக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கக்கூடாது’’ என்ற கடுமையான உத்தரவுடன் அவர் பி்ணையில் வெளிவந்தார். தொடர்ந்தும் வழக்குகள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் திகதி அடுத்த தவணை வழக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






