ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனையும் சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் இன்று ( 26.12.2017) காலை 9 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மௌன பிராத்தனையுடன் ஆரம்பமான இப் பிராத்தனை நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றுதல், மலர் அஞ்சலி செலுத்துதல், சர்வமத பிராத்தனை, சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழா என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா பூந்தோட்டம் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமி பேரலையின் 31ம் நாள் நினைவாக 26.01.2005ம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் சுனாமிப்பேரலை அனர்த்த நினைவுத் தூபி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம் , ம.தியாகராஜா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் , கிராம சேவையாளர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், நகரசபை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பிரதீபன், தமிழருவி சிவகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுனாமியினால் உயிரிழந்த உறவினர்களின் உறவுகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட சிறுவர் நினைவுப் பூங்காவினை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் திரை நீக்கம் செய்து வைத்தார்.

































