வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுங்கள் : முதலமைச்சருக்கு ப.சத்தியலிங்கம் அவசரக் கடிதம்!!

499

கடந்த ஒருவருடமாக தொடரும் வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை தீர்க்க மாவட்ட செலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைத்த உதவுமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவசரக்கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் மா.ச.உறுப்பினர் நேற்று (02.01.2018) முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

02.01.2018
வவுனியா.

மாண்புமிகு சி.வி.விக்கேஸ்வரன் அவர்கள்
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்.

கௌரவ முதலமைச்சர் அவர்களே

வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருதல்

மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் மேலான கவனத்திற்கு தயவுடன் தெரிவித்துக்கொள்வதாவது, வவுனியா மாவட்டத்தின் நகர அபிவிருத்தி தொடர்பில் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சார்லஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட நகர அபிவிருத்திக் குழுவொன்று 2010 ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு துறைசார்ந்த நிபுணத்துவம் மிக்கவர்கள் அங்கத்தவர்களாக இருந்தார்கள். சுகாதார துறைசார்பில் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாக நானும் அங்கம் வகித்திருந்தேன். அதில் நகரின் இடநெருக்கடியை கருத்தில்கொண்டு வவுனியா நகரை விரிபுபடுத்தும் வகையில் 2010-2020ற்கான நீண்டகால அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. அதில் சிலமுன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையை விரிவுபடுத்தம் வகையில் தற்போதைய மாவட்ட செயலக காணியை பயன்படுத்துவதெனவும்,
உள்வட்ட வீதி, வெளிவட்ட வீதிகள் அடங்கிய அரச உத்தியோகத்தர் விடுதிகள் உள்ள பிரதேசத்தை மாவட்டத்திற்கான போக்குவரத்து சந்திப்பு பிரதேசமாக ஆக்குவதெனவும்
தற்போதைய அரச விவசாயப்பண்ணையை நகருக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்கு நகர்த்தி 200 ஏக்கர் காணியில் விவசாயப்பண்ணை அமைப்பதெனவும்
அரசாங்க நிர்வாக செயலகங்களை தற்போதைய அரசபண்ணைப்பகுதிக்கு நகர்த்துவதோடு
அரச உத்தியோகத்தர் விடுதிகளை பூந்தோட்டம் கல்வியல்கல்லூரி பிரதேசத்திற்கு அருகில் அமைப்பதென்பனவும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த அரசாங்கத்தில் 2013ம் ஆண்டில் வவுனியா மாவட்டத்திற்கென மத்திய பேரூந்து நிலையம் அமைப்பதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டதுடன் துறைசார் திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படாது தன்னிச்சையாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட போக்குவரத்து சந்திப்பு பிரதேசத்தை புறந்தள்ளி தற்போதைய அரச பண்ணை பகுதியில் பேரூந்து நிலையம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவானது வடக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவாகும்.

எனினும் இதுதொடர்பில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலர் மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் தொடர்புகொண்டபோதும் வவுனியாவில் தாங்கள் கோரும் இடத்தில் காணி வழங்கப்படாவிட்டால் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த பேரூந்து நிலையத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி இந்த இடத்தில் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டது.

எது எப்படியோ பெருமளனவிலான நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பேரூந்து நிலையத்தை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதற்காக திறந்துவிடுவதற்கு பலமுயற்சிகள் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டிருந்தும் ஒருவருடமாக இந்த பேரூந்து நிலையம் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளால் முடிவெதுவும் எட்டப்படாமல் தொடர்கதையாக இருந்துவந்துள்ளது.

எனினும் கடந்த வருடம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மேற்படி பிரச்சனை தொடர்பிலான விசேட சந்திப்பொன்றில் தனியார் போக்குவரத்து சங்கப்பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் ஆகிய மூன்று தரப்பினரும் கலந்துகொண்டு பின்வரும் முடிவு எட்டப்பட்டது.

அதாவது பழைய பேரூந்து நிலையத்தை உள்ளுர் சேவைக்கான நிலையமாக மாற்றுவதுடன் புதிய மத்திய பேருந்து நிலையத்தை வெளி மாவட்டங்களுக்கான மாகாணங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் பொருட்டு பயன்படுத்துவதற்கு அனைவரினதும் சம்மதம் பெறப்பட்டிருந்தது.

ஆனாலும் தாங்கள் தற்போது எடுத்துள்ள அதிரடிமுடிவான பழைய பேருந்து நிலையத்தை மூடும் செயற்பாடானது எமது மாவட்டத்தில் ஒரு பதற்றமான நிலைமையை தோற்றுவித்துள்ளதுடன் போக்குவரத்து சேவைகளில் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியமையானது ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் அங்குள்ள 130ற்கு மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்கள் செயலிழந்துள்ளதுடன் அதில் வேலைசெய்யும் 600ற்கு மேற்பட்ட வேலையாட்களின் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக இந்த வருடம் பிறந்த முதல்நாளிலிருந்து இந்த பிரச்சனை உருவெடுத்துள்ளமை பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

எனவே இதுதொடர்பில் ஏற்கனவே மூன்று தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தனியார், அரச போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் அவசரமானதும் அவசியமானதுமான சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தி இந்தப்பிரச்சனையை அனைவருக்கும் சாதகமான விதத்தில் தீர்த்துவைப்பதற்கு ஆவன செய்யுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

உண்மையுள்ள
மருத்துவர் ப.சத்தியலிங்கம்
மாகாண சபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்.