வவுனியா பேரூந்து நிலையப் பிரச்சினைக்கு தீர்வு : முடிவிற்கு வந்த சர்ச்சை!!

610

 

வவுனியாவில் பூதாரகாரமாக உருவெடுத்துள்ள போக்குவரத்து பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைக்கப்பபெற்றுள்ளது.

இதன்படி வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இன்று காலை முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தில் எமக்காக ஒரு பகுதி தருவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது, தூர இடத்திற்கு செல்லும் பேருந்துகளும், வெளி மாகாணங்களில் இருந்து வரும் பேருந்துகளும் நேராக செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உள்ளூர் சேவைகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.

அத்துடன் இணைந்த நேர அட்டவணையில் எமக்கு 40 வீதமும் தனியாருக்கு 60 வீதமும் கொடுத்து புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தாம் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக” இ.போ.சபையின் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு தை மாதம் 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் புதிய பேருந்து நிலையம்  அமைக்கப்பட்டிருந்தது. திறந்த அன்று தவிர ஒரேயொரு நாள்கூட கடந்த வருடத்தில் அந்த நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெற்றதில்லை.

வடமாகாண முதலமைச்சரினால் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்கு அனைவரையும் செல்லுமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வரும் நிலையில், இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள 130 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வந்தார்கள்.

இதையடுத்து, கொழும்பிலிருந்து சென்ற குழுவினருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும், இ.போ.சபையினருக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் சில நாட்களாக வவுனியாவில் இருந்த பதற்றமான  சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.