டெல்லி பாணியில் ஓடும் பஸ்சில் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி..!

812

rapடெல்லி மருத்துவ மாணவியை போல் கேரளாவில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற கண்டக்டர் உள்பட 3பேரை பொலிசார் கைது செய்தனர். டெல்லில் கடந்தாண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவிலும் ஓடும் பஸ்சில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி மரடு அருகே உள்ள கண்ணாடிக்காடு பகுதியை சேர்ந்த 23 வயது மாணவி, ஆலுவாவில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டம் படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு தனியார் பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு பஸ்சில் அவர் சென்றார். பஸ் உரிமையாளர் பாபுராவின் மகன் திலீப்குமார் கண்டக்டராக இருந்தார்.

களமசேரி என்ற இடம் அருகே பஸ் சென்றபோது மாணவிக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்த திலீப் குமார், கிளீனர் அப்பு ஆகியோர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்தனர்.

அடுத்த நிறுத்தத்தில் பல பயணிகள் இறங்கினர். பஸ்சில் சிலர் மட்டுமே இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திய இருவரும், மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர், டிரைவர் பீட்டரிடம் சென்று புகார் கூறினார்.

ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, மாணவி தனது செல்போன் மூலம் பெற்றோர், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே, பொலிசுக்கு பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று வைட்டிலா என்ற இடத்தில் பஸ்சை மடக்கினர். பொலிசை பார்த்ததும் திலீப் குமாரும், அப்புவும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.

டிரைவர் பீட்டரை கைது செய்த பொலிசார், பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும், களமசேரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த திலீப் குமார், அப்புவையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 3 பேரையும் பொலிசார் நேற்று எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.