தமிழகத்தின் சேலத்தில் பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மாணவியின் தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பாப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இன்ஸ்பெக்டரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது மனைவி மலர்கொடி (45). இவர்களுக்கு கமலேஷ் என்ற மகனும், திவ்யஸ்ரீ (16) என்ற மகளும் உள்ளனர்.
கமலேஷ் சென்னையில் தங்கி என்ஜினீயரிங் படித்து வருகிறார். திவ்யஸ்ரீ பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வந்தார். இதற்காக மலர்கொடி அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மகளுடன் வசித்தார்.
இவர்கள் காலாண்டு தேர்வு விடுமுறைக்காக சொந்த ஊரான பாப்ப நாயக்கன் பட்டிக்கு சென்றனர். அங்கு கடந்த 3-ம் திகதி மாணவி திவ்யஸ்ரீ வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதுப்பற்றி அவரது தாய் மலர்கொடியிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, சரியாக சமைக்க சொன்னதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறினார். மேலும் மாணவியின் தாத்தா ரங்கசாமி என்பவர் திவ்யஸ்ரீ சாவில் சந்தேகம் உள்ளது என்று புகார் செய்தார்.
மேலும் மாணவியின் தாய் மலர்கொடியும் இதே போல் ஒரு புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் மாணவி திவ்யஸ்ரீயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில் மாணவியின் முதுகு, மற்றும் வயிற்று பகுதியில் காயம் இருந்தது தெரியவந்தது.
இதன் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது மாணவியின் தாய் மலர்கொடிக்கும், ராசிபுரம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (35) என்ற சாரதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவி திவ்யஸ்ரீ இவர்களின் தொடர்பை கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாணவியை தாக்கியதும் தெரியவந்தது.
எனவே இதில் மனம் உடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பொலிசார் தற்கொலைக்கு தூண்டியதாக மலர்கொடி அவரது கள்ளக்காதலன் கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் மாணவி தூக்குப்போட்டு கொண்ட சேலையை எரித்த துரைசாமி (64) என்பவரையும் பொலிசார் கைது செய்தனர்.
தனது மகள் சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுத்த தாயே இந்த வழக்கில் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.