யாழில் பதுங்கு குழியில் மறைந்திருந்த 5 இளைஞர்கள் : துரத்திப்பிடித்த பொலிஸார்!!

217
யாழ் தென்மராட்சி தெற்கு மறவன்புலவு பகுதியில் பதுங்கு குழியினுள் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுங்கு குழியினுள் மறைந்திருந்த குறித்த இளைஞர்களை கைது செய்த பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் தப்பியோடி விட்டதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, 3 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கேரதீவு முதன்மை வீதியிலிருந்து ஒருவர் சென்றதனை சிவில் உடையில் நின்ற பொலிஸ் அலுவலர் கண்டு, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது குறித்த நபர் பதுங்கு குழி ஒன்றிற்கு செல்வதையும், அங்கு மேலும் பலர் இருப்பதையும் கண்டுள்ளார்.

இதையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல்வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரைக் கண்டதும் குழியில் இருந்த 5 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

இவர்களை துரத்திச்சென்றபோது இருவர் கைது செய்யப்பட்டதுடன், மூவர் தப்பி ஓடியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி மற்றும் அளவெட்டியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அண்மைக்காலமாக வடக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.