வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று கைதடியில் ஆரம்பம்..!

445

nothernவடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது.

இதனை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வடமாகாண சபை உறுப்பினர்களுடைய சத்தியப்பிரமாண உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல், உறுப்பினர்களை வழிகாட்டி இருக்கைகளுக்கு அழைத்துச் செல்லுதல், செயலாளர் சபையில் உட்பிரவேசித்தல் மற்றும் செயலாளரின் அறிவித்தல்கள் வெளியிடுதல் போன்றன இடம்பெறவுள்ளன.



இதனைத் தொடர்ந்து செயலாளர் ஆளுநருடைய பிரகடனத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வாசிக்கவுள்ளார்.

இதன் பின்னர் பேரவைத் தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது. வேறு பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் வாக்களிப்புக்கு தயார்படுத்தல், வாக்குகளை எண்ணுதல் முடிவுகளை தெரியப்படுத்துதல் என்பன இடம்பெறவுள்ளன.

கைதடியில் அமைக்கப்பட்டு வரும் மாகாண சபைக்கான கட்டிடத்தைத் முதலில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனும் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார்கள்.