பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது – விக்னேஸ்வரன்..!

272

cvதேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இன்று (25) காலை ஆரம்பமானது.

இங்கு தனது முதலாவது உரையை நிகழ்த்திய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்…

வடக்கில் இராணுவப் பாவனைக்காக காணி அபகரிக்கப்படுவதை நிறுத்தி, அந்தக் காணிகளை உரிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான கால அட்டவணை ஒன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டும்.

தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை புரியாத பொலிஸார் வடக்கில் இருப்பது, அன்றாட வாழ்க்கைக்குத் தடையாகும். எனவே உள்ளூரில் இருந்து பொலிஸார் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

வடமாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடு, முன்னேற்றம் தொடர்பில் காலம்தோறும் ஆராயப்படும். இலஞ்ச ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

மக்கள் சேவையை மதிக்காத அலுவலகர்கள் கண்டறியப்பட்டு சீர்திருத்தப்படுவர். வடமாகாண ஆளுனர் கடந்த தேர்தல் காலத்தில் பக்கச் சார்பாக செயற்பட்டார்.

தென்னிந்திய மக்கள், கட்சித் தலைவர்களின் பங்கை பெரிதும் விரும்புகிறோம். தென்னிந்திய இளைஞர், யுவதிகளின் வேகம் எங்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றது. அந்த சேவையை நாம் மறக்கவில்லை.

1990ம் ஆண்டுகளில் வடக்கில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதில் அக்கறையெடுப்போம்.

நாங்கள் பிரிவினைவாதிகள் இல்லை என்பதை தெற்கில் உள்ள சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடமாகாண சபை எதிர்த்தரப்பு நண்பர்களுக்கு நேசக்கரம் நீட்டுகிறோம். அவர்கள் எம்மோடு இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இராணுவ அடக்குமுறையின் கீழ் நடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். வடக்கில் துறைமுகங்கள் அமைத்து அண்டைய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.