பூமியின் அழகை ரசிக்க விரைவில் பலூன் பயணம்..!

344

balloonபாரசூட் உதவியுடன் பூமிக்கு மேலே பறந்து சென்று அழகை ரசிக்கும் திட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிக் கொண்டு போறோம் என்று ஒரு குரூப் ஏற்கனவே ஆட்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் பூமியிலிருந்து 30 கி.மீ உயரம் வரை பலூனில் மேலே பறந்து சென்று, பாரசூட் உதவியுடன் மீண்டும் கீழிறங்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

World View என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விண்வெளி சுற்றுலா தொடர்பான விவரங்களையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ராட்சத பலூனில் பயணிப்பவர்களுக்காக விசேஷ இருக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் அமர்ந்து பலூன் மூலம்,பூமியிலிருந்து 30 கி.மீ உயரம் வரை பறந்து சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள பாரசூட் உதவியுடன் மீண்டும் தரையில் இறங்கலாம்.

அப்போது வளி மண்டலத்தில் நிலவும் இருட்டு, தட்ப வெப்பநிலை, நட்சத்திரங்களில் ஒளிர்வு ஆகியவற்றை உணர முடியும்.

இந்த புதிய அனுபவத்தைப் பெற 46லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், 2015ம் ஆண்டு இந்த சுற்றுலா தொடங்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும், அவ்வளவு உயரத்திலிருந்து பூமியைக் காண்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சியை உண்டாக்கும் என்றும் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சுற்றுலாவின் போது சுற்றுலா வருவோர் ஜாலியாக மது அருந்தியபடியே நமது பூமியின் கீழ் அழகையும், விண்வெளியின் மேல் அழகையும் பார்த்து பிரமிக்கலாம்.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜேன் பாயிண்டர் கூறுகையில், இது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும்.

மணிக்கணக்கில் வான்வெளியில் மிதந்த அனுபவ்ம் மக்களுக்குக் கிடைக்கும். இந்த பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பலூனானது, ஒரு ஜெட்விமானத்தின் அளவுக்கு பெரிதாக இருக்கும். மிகவும் சொகுசான வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.

இந்த கேபினுக்குள் உட்கார்ந்தபடியும் வேடிக்கை பார்க்கலாம், நடந்தபடியும் பார்க்கலாம், மதுஅருந்தலாம், அங்கேயே பார் வசதியும் செய்யவுள்ளோம், மிகவும் சவுகரியமாக இந்தப் பயணத்தை அனுபவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் பயணம் எந்த இடத்திலிருந்து தொடங்கும் என்ற விவரத்தை நிறுவனம் அறிவிக்கவில்லை.