அவுஸ்திரேலியா 79 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது..!

291

ausபடகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடம் கோரி 79 இலங்கை பிரஜைகளை அந்நாடு இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரை சுமார் ஆயிரத்து 400 பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆயிரத்து 100 பேர் தமது சுயவிருப்பத்தின் பேரில் இலங்கை திரும்பியதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் விசா அனுமதியின்றி வரும் போது அவர்கள் எந்த காரணத்திற்காக அங்கு வந்தனர் என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.

அவர்களின் கூற்றுக்கள் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக இல்லாது போனால் அவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டியது கட்டாயமானது.

இலங்கை உட்பட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் செல்லுப்படியான விசா இன்றி படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தால் அவர்களுக்கு அங்கு நீண்டகாலம் தங்க இடமளிக்கப்பட மாட்டாது என்ற புதிய சட்டத்தை அந்நாடு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி வெளியிட்டது.

அவர்கள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் பப்புவா நியூகினியா அல்லது நாவுறு ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் மூன்று தசாப்த கால போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும் இலங்கையில் இருந்து செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அழுத்தங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்நோக்கியது.

அதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த சுமார் ஆயிரத்து 500 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுக்கும் நோக்கிலான கண்காணிப்பு பணிகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை கடற்படையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது.

அத்துடன் இலங்கை மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு திட்டங்களையும் அந்த நாடு செயற்படுத்தியுள்ளது.