டிவில்லியர்ஸ் – சுமித் சாதணை இணைப்பாட்டம் – தென்னாபிரிக்கா வலுவான நிலையில்..!

307

saதென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 99 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கேப்டன் கிரேமி சுமித் 67 ஓட்டங்களுடனும், ஸ்டெயின் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட ஸ்டெயின் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து சுமித்துடன், விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டத்தை பெற முன்பே விக்கெட்டை இழந்திருக்க வேண்டியது. சந்தித்த முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அட்னன் அக்மல் கோட்டை விட்டார். இது தான் பாகிஸ்தானுக்கு பேரிடியாக விழுந்தது.

அது மட்டுமின்றி டிவில்லியர்சுக்கு இன்னொரு அதிர்ஷ்டமும் கிடைத்தது. அவர் 25 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் அவுட் வழங்க மறுத்து விட்டார். நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் (டி.ஆர்.எஸ்) செய்யும் வசதியை (இரண்டு முறை) ஏற்கனவே பாகிஸ்தான் பயன்படுத்தி விட்டதால், அவர்களால் அப்பீல் செய்ய முடியவில்லை. ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பை தாக்குவது தெளிவாக தெரிந்தது.

கிடைத்த அதிர்ஷ்ட கருணையுடன் டிவில்லியர்ஸ் பாகிஸ்தானின் பந்து வீச்சை நொறுக்கினார். மற்றொரு புறம் சுமித்தும் நிலைத்து நின்று மிரட்டினார். 27-வது சதத்தை 204 பந்துகளில் நிறைவு செய்த சுமித் இரட்டை சதத்தை நோக்கி துரிதமாக முன்னேறினார். பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் பந்து வீச்சில் பல்வேறு யுக்திகளை கையாண்டும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

அபாரமாக ஆடிய சுமித் 5-வது இரட்டை சதத்தை தொட்டார். இதற்கிடையே டிவில்லியர்ஸ் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டு தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்ததுடன், பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்களையும் கடந்தார்.

முதல் நாளில் மொத்தம் 13 விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் 2-வது நாளில் தென்ஆப்பிரிக்கா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. பாகிஸ்தானால் ஒரு விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 134ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 460 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது. சுமித் 227 ஓட்டங்களுடனும் (367 பந்து, 16 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 157 ஓட்டங்களுடனும் (262 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்கா இதுவரை 361 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.