புதுவையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் சபாநாயகர் சபாபதிக்கு அனுப்பி உள்ள மனுவில்,
“தமிழ் மக்களின் ஒருமித்த கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இலங்கையில் நவம்பர் மாதம் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் எங்கள் அம்மா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
இந்தியாவில் தமிழ் பேசும் மாநிலங்களான தமிழகம், புதுவை ஆகிய 2–ல் தமிழகத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தை பின்பற்றி காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற புதுவையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.