ஜப்பான் தலைநகர் டோக்கியோ இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் திடீரென்று அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் தூக்கக் கலக்கத்துடன் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் டோக்கியோ நகரில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹொன்ஷுவில் முழுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. ஹொன்ஷு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலோரம் உள்ள இதர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவை 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் சுமார் 19 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.
இன்றைய நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.