அமெரிக்கா, 35 நாட்டு தலைவர்களின், தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டுள்ளதாக, பிரிட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவு நிறுவனமான, என்.எஸ்.ஏ., உலகின் பல்வேறு நாட்டு பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த,ஸ்னோடென் என்பவர் அம்பலப்படுத்தினார்.
இதற்காக, அமெரிக்கா, அவரை கைது செய்ய முயன்றதை அடுத்து, ஸ்னோடென், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர், வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர், 10ம் திகதி முதல் இந்த ஆண்டு, ஜனவரி 8ம் திகதி வரை, 7.3 கோடி பேரின் தொலைபேசி உரையாடல்களை, என்.எஸ்.ஏ., உளவு பார்த்ததாக, பிரான்ஸ் நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜேர்மன் நாட்டு தலைவர்கள் உற்பட, 35 நாட்டு தலைவர்களின், 200க்கும் அதிகமான, தொலைபேசி உரையாடல்களை, அமெரிக்க உளவு அமைப்பு, ஒட்டு கேட்டுள்ளதாக, ஸ்னோடென் கூறியதை, பிரிட்டன் பத்திரிகை, “கார்டியன்´ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் அதிபர், ஏஞ்சலா மெர்கல்லின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதை, அந்நாட்டு புலனாய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. “”தோழமை நாட்டையே உளவு பார்ப்பது ஏற்க முடியாதது ; இது,அந்நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாக உள்ளது,´´ என,ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தூதரிடம், கண்டன கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல, பிரான்ஸ் நாடும், அமெரிக்காவுக்கு, தூதர் மூலமாக கண்டனம் தெரிவித்திருந்தது.
“தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே, இந்த உளவு நடவடிக்கையை மேற்கொண்டோம், எதிர் காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்படும்´ என,அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.