தமிழகத்தையே அதிரவைத்த கொலை வழக்கு : தஷ்வந்த் குற்றவாளி என அறிவிப்பு!!

604

தமிழகத்தை அதிர வைத்த ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தண்டனை விபரத்தை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு பொலிஸ் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேரடி சாட்சிகள் ஏதும் இல்லாததால் குற்றச்சாட்டுகளை அறிவியல் பூர்வமாக நிரூபித்ததாகவும், அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கும் எனவும் ஹாசினி தரப்பு வழக்கறிஞரான கண்ணதாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஹாசினி எனும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அதன் பின்னர் பிணையில் வெளியே வந்த தஷ்வந்த், கடந்த டிசம்பர் 2ஆம் திகதி தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு, அவரின் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.

மும்பையில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, விமான நிலையத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர், மும்பை பொலிசாரின் உதவியுடன் தஷ்வந்தை கைது செய்த பொலிசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம் தனக்கு தண்டனை அளிக்குமாறு கோரிய தஷ்வந்த், பின்னர் தான் கொலை செய்யவில்லை என்று கூறினார்.