வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அவரச வேண்டுகோள்!!

482

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

அன்றைய தினம் வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சங்கங்களும் மஞ்சல் சிவப்பு கோடிகளை பறக்க விட்டு ஆதரவினை வழங்குமாறு இன்று (20.02.2018) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 362ஆவது நாட்களை அடைந்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதி எமது போராட்டம் ஒருவருடத்தினை எட்டவுள்ளது.

எமது போராட்டம் ஆரம்பத்தில் கடந்த 2017 தை மாதம் 23அம் திகதி சாகும் வரையிலான போராட்டத்தினை மேற்கொண்டு அதனூடாக பல விளைவுகளை சந்தித்து அதன் பின்னர் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2017. 02.24 அன்றைய தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி ஒரு வருடத்தினை எட்டவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு மக்களுடைய பெரும் ஆதரவு தேவை, கடந்த 2017ஆம் ஆண்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது எமது கோரிக்கைக்கு அமைவாக அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்புப் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார்கள்.

அதே போல எமது போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஒரு வருடமாகின்றது , அன்றைய தினம் வடக்கு கிழக்கிலுள்ள சங்கங்களான, பேருந்துச்சங்கம், வர்த்தகர் சங்கம், இ.போ.ச பேருந்து , ஆசிரியர்கள் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறு வியாபாரிகள் சங்கம், பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சகலரும் சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி எமது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதுடன் உங்களது பணிகளை வழமையாக மேற்கொள்ளவும்.

தற்போது சர்வதேசத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு முழுமையான ஆதரவாக சர்வதேசத்திற்கு எடுத்துக்கட்டவேண்டும். எங்களுடைய போராட்டத்தில் அரச தரப்பில் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேசத்தினை தலையிடுமாறு வலியுறுத்தி வருகின்றோம்.

அவர்கள் வந்து இறங்குவதாலே எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அதனை நோக்கியதாகவே நாங்கள் நடாத்திக்கொண்டு இருக்கின்றோம்.

உறுதியான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் எமது போராட்டத்தினை நிறுத்த மாட்டோம். எனவே சனிக்கிழமை எமது போராட்டத்திற்கு தமிழ் மக்களாகிய நீங்கள் சிவப்பு மஞ்சல் கொடிகளை பறக்கவிட்டு எங்களுடைய போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கோரி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.