புதுடில்லியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆசிப் கான் (22) என்னும் இளைஞர், ஒரு மணிநேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்.
ஒரு டீ வியாபாரியின் மகனான ஆசிப் கான் அலிகரைச் சேர்ந்த பொறியியிலாளர். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
தொடர்ந்து Cardiopulmonary Resuscitation (CPR) மூலம் அவரது இதயத்திற்கு தொடர்ந்து இரத்தம் பாய்வதை மருத்துவர்கள் உறுதி செய்தும் அவரது உடலில் எந்த அசைவும் இல்லை.
தொடர்ந்து அவருக்கு மருத்துவம் கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
அவரது மாரடைப்புக்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காக Catheterisation Lab என்னும் ஆய்வகத்திற்கு மருத்துவர்கள் அவரைக் கொண்டு சென்றனர், கொண்டு செல்லும் வழியில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது நிலைமை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைகளுக்காக அவர்களது ஒப்புதல் பெறப்பட்டது.
ஆசிப் கானை எழுந்து நடக்க வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர் மருத்துவர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல பிரச்சினைகளுக்குப்பின் அவரது உடலில் சிறிது அசைவு காணப்பட்டது.
ஆனால் அவரது இதயம் இயங்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் கோமாவுக்கு சென்றார். மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசமும் பல மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டன. இரண்டு நாட்களுக்கு அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
பின்னர் திடீரென்று அவர் கண்களைத் திறந்தார், அவரது உடல் இயங்க ஆரம்பித்தது. “அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என்று நாங்கள் நினைத்தோம், அதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டிருக்கும் நேரத்தில் திடீரென்று அவர் கண்களைத் திறந்தார்” என்று கூறும் மருத்துவர் NN. Khanna, ”மிகவும் குறைந்த வயது அவருக்கு, அவரை எப்பாடு பட்டாகிலும் காப்பாற்ற விரும்பினோம்” என்கிறார்.
மருத்துவனையே மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. ஒரு மணி நேரம் அவரது இதயம் இயங்காவிட்டாலும் மருத்துவர்களின் விடாமுயற்சியும் அவரது மனோதிடமும் ஆசிப் கானை மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளன.






