ஈரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி அங்குமிங்குமாக சுற்றியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (50), இவரது மனைவி சித்ரா, பொள்ளாச்சியை சேர்ந்தவர். தம்பதிக்கு சைனி (9) மற்றும் சைலோனி (12) என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்த சித்ரா கோவையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஐரிங்கின் இரு மகள்களும் தாயை பார்க்க வேண்டும் என கூறியதால் பெங்களூருவிலிருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பேருந்தில் ஐரிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஈரோட்டில் இரவு 11 மணிக்கு திடீரென கீழே இறங்கிய ஐரிங் அங்குள்ள மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.
இதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், பொலிசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த ஐரிங்கை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.
பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்த நிலையில், இதுகுறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் ஐரிங் மற்றும் அவர் மகள்களை அழைத்து சென்றார்கள்.







