அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களா நீங்கள் : இதோ அபாய எச்சரிக்கை!!

492

மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடித்து புற்று நோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்தான் மனித சமுதாயம் உள்ளது.

சமீபத்தில் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக 5 இலட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 6 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் சுமார் 2,391 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவர்களில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் ஆண்களே அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி முன்பு அதிக நேரம் செலவழிக்காத ஆண்களுக்கும் , தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும்போது ஆண்களிடையே அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உள்ளிட்ட பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திண்பண்டங்களை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுகிறது” என ஆராய்ச்சியாளர் நீல் முர்ஃபி தெரிவிக்கிறார்.